மதுரவாயல் அருகே பிளைவுட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
|மதுரவாயல் அருகே பிளைவுட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மதுரவாயல்,
மதுரவாயல் அடுத்த வானகரம், பிள்ளையார் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான பிளைவுட் கம்பெனி செயல்பட்டு வந்தது. அந்த வளாகத்திேலயே டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலை மற்றும் கார் பழுது பார்க்கும் நிலையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் பிளைவுட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
காற்றின் வேகத்தால் தீ அடுத்தடுத்து இருந்த டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலை மற்றும் கார் பழுது பார்க்கும் நிலையத்துக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டம் எழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட 10 தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் பிளைவுட் கம்பெனி முற்றிலும் எரிந்து நாசமானது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. தீ விபத்தில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலையில் 2 டிரான்ஸ்பார்மர்களும், கார் பழுது பார்க்கும் நிலையத்தில் நிறுத்தி இருந்த 2 கார்களும் சேதம் அடைந்தன.
முழுமையாக தீ அணைக்கப்பட்டாலும் பிளைவுட் தொழிற்சாலையில் தொடர்ந்து புகை வந்த வண்ணம் இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பொருட்களை அகற்றி விட்டு மீண்டும் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.