< Back
மாநில செய்திகள்
ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து
சென்னை
மாநில செய்திகள்

ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து

தினத்தந்தி
|
19 Jun 2023 10:23 AM IST

சென்னை ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

தீ விபத்து

சென்னை ராயப்பேட்டை, தலையாரி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் உள்ள பாரதி சாலையில் மரத்தினால் ஆன சோபா, நாற்காலி மற்றும் பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைக்கு விடுமுறை ஆகும்.

நேற்று மாலை 4 மணியளவில் அவரது பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதை கண்ட அருகில் இருந்தவர்கள் கடை உரிமையாளர் பாஸ்கரனுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக ராயப்பேட்டை, திருவல்லிகேணி, மயிலாப்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ரூ.50 லட்சம் சேதம்

10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், பர்னிச்சர் கடையில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடைக்குள் கிரீஸ் ஆயில் டப்பாக்கள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர், தீயணைப்பு வீரர்கள் கடையின் பின்புறம் துளையிட்டு உள்ளே சென்று கிரீஸ் ஆயில் டப்பாக்களை அகற்றினர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கடைக்குள் இருந்த பஞ்சு மெத்தை, தலையணை, நாற்காலி உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

தீ விபத்து குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்