திருவள்ளூர்
திருத்தணி அருகே 4 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த குத்தகைதாரர் கைது
|திருத்தணி அருகே 4 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த குத்தகைதாரரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி அடுத்த எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் 2 குடும்பத்தினர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து 2 குடும்ப தம்பதிகளான 4 பேரை மீட்டார். விசாரணையில் அவர்கள் அங்கே கடந்த 6 ஆண்டுகளாக மாதம் ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரத்து 250 பணத்துக்கு வேலை செய்தது தெரிய வந்தது.
அவர்களுக்கு கொத்தடிமை விடுதலைச் சான்று வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை தாசில்தார் ரமேஷ் எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் சென்னையை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான மாந்தோப்பில் 4 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த உரிமையாளர் கோவிந்தராஜ் (வயது 41), மாந்தோப்பை குத்தகைக்கு நடத்தி வந்த கே.ஜி.கண்டிகை பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஹேமாத்திரி (42) ஆகிய 2 பேர் மீதும் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹேமாத்திரியை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சென்னையில் உள்ள கோவிந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர்.