சென்னை
வண்ணாரப்பேட்டையில் செல்போனை 'சார்ஜ்' செய்தபடி பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
|வண்ணாரப்பேட்டையில் செல்போனை ‘சார்ஜ்’ செய்தபடி பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டை கெனால் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் காமராஜ் (வயது 22). இவர், மூலக்கொத்தளத்தில் உள்ள கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை காமராஜ், மெரினா கடற்கரைக்கு சென்றார். பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது செல்போனில் 'சார்ஜ்' குறைந்து இருந்தது.
இதனால் காமராஜ், தனது செல்போனை 'சார்ஜ்' செய்தபடி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வண்ணாரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான காமராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.