< Back
மாநில செய்திகள்
வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் குத்திக்கொலை
விருதுநகர்
மாநில செய்திகள்

வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் குத்திக்கொலை

தினத்தந்தி
|
11 Oct 2023 12:28 AM IST

அருப்புக்கோட்டை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன்கள் சரவணகுமார் (வயது24), ராஜா (21), சசிக்குமார் (18).சரவணகுமாருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர்.சசிக்குமார் கட்டிடத்தொழில் மற்றும் சிற்பம் செய்யும் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், வெளியூரில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து மது குடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அவரது மூத்த சகோதரர் சரவணகுமார் கண்டித்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் சில நாட்களாக தகராறு இருந்து வந்தது.

சசிக்குமார் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி உள்ளார்.மற்றவர்கள் வீட்டின் வெளியே தூங்க சென்றுள்ளனர். நேற்று காலை கணபதி, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்.அப்போது சசிக்குமார் கழுத்து அறுக்கப்பட்டும், வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணபதி, இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சசிக்குமார் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சசிக்குமாரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்