அரியலூர்
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
|தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செந்துறை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தொடர் திருட்டு...
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புரட்சித்தமிழன் (வயது 27). இவர் கடந்த 15.10.2022 அன்று பரணம் கிராமத்தை சேர்ந்த மாடு மேய்க்கும் பெண் ஒருவரிடம் இருந்து 4½ பவுன் தாலிச்சங்கிலியை பட்டப்பகலில் பறித்து சென்றார். இந்த வழக்கில் இரும்புலிக்குறிச்சி போலீசார் புரட்சித்தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அரியலூர் மாவட்டம் முழுவதும் 11 திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 20.12.22 அன்று வழக்கம்போல் நீதிமன்ற காவலுக்காக செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புரட்சித்தமிழனை போலீசார் அழைத்து வந்தனர். அவரை பார்க்க அவரது மனைவி லோகபிரியா கோர்ட்டிற்கு வந்துள்ளார். திடீரென தனது கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து லோகபிரியா தற்கொலைக்கு முயன்றார்.
3 ஆண்டுகள் சிறை
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இந்த வழக்கை செந்துறை குற்றவியல் நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். 5 மாதத்தில் அனைத்து சாட்சிகளையும் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில், புரட்சித்தமிழனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளி த்து உத்தரவிட்டார்.