சென்னை
நடுவானில் விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்
|ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது நடுவானில் விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் 164 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தில் பயணித்த செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த சுரேந்தர் (வயது 34) என்பவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் முழுபோதையில் இருந்த சுரேந்தர், சக பயணிகளிடம் தகராறு செய்தார்.
மேலும் நடுவானில் விமானத்தில் தனது ஆடைகளை கழற்றி ரகளை செய்ததாக கூறப்படுகிறது. உடனே சக பயணிகள் விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். விமான பணிப்பெண்கள் சுரேந்தரிடம், "அமைதியாக இருக்க வேண்டும். யாருக்கும் இடையூறு செய்யக்கூடாது" என அறிவுறுத்தினர்.
ஆனால் சுரேந்தர் அதை கேட்காமல் போதையில் சக பயணிகளை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியபடி ரகளையில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் செய்தனர். அதோடு போதையில் ரகளை செய்த சுரேந்தர் அருகே இருந்த சக பயணிகளை மாற்று இருக்கைகளில் அமர வைத்தனர்.
இந்த நிலையில் விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பயணி ஒருவர் விமானத்துக்குள் ரகளை செய்து சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கிறார் என தகவல் கொடுத்தார்.
பின்னர் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கு தயாராக இருந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி போதையில் ரகளை செய்த பயணி சுரேந்தரை கீழே இறக்கினர். பின்னர் குடியுரிமை சோதனை, சுங்க சோதனை போன்றவற்றை முடித்துவிட்டு விமான நிலையத்தில் உள்ள விமான நிறுவன மையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போதும் சுரேந்தர், "என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. நான் யார்? என்பதை காட்டுகிறேன்" என்று போதையில் பேசியபடி இருந்தார். பின்னர் சுரேந்தரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது குடிபோதையில் சக பயணிகளிடமும், பணிப்பெண்களிடமும் ரகளையில் ஈடுபட்டார் என்று அவர் மீது புகார் செய்தனர். அதன்பேரில் சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.