உரிய ஆவணமின்றி மொபட்டில் கொண்டு வந்த போது ரூ.28 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் கைது
|உரிய ஆவணமின்றி மொபட்டில் கொண்டு வந்த போது ரூ.28 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் கைது. இது ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஏழுகிணறு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணக்கட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை ஏழுக்கிணறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த முகமது சுஹைப் (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவை ஹவாலா பணமாக இருக்கலாம் என்று எண்ணி போலீசார் உஷாராயினர்.
பின்னர் முகமது சுஹைப்பிடமிருந்த ரூ.28 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணடி, சவுகார்பேட்டை, பிராட்வே, பூக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு ஹவாலா பணம் புழக்கம் இருப்பதாக வரும் தகவலையடுத்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.