சென்னை
முன்விரோத தகராறில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்
|பெரம்பூர்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, அப்பர் சாமி தோட்டம், 2-வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இவரது வீட்டின் முன் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் கண்ணனுடன் அந்த வாலிபர் தகராறு செய்தார். அக்கம் பக்கத்தினர் வாலிபரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர், கண்ணன் வீட்டின் பால்கனி சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பெட்ரோல் குண்டு வெடித்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த தீயை அணைத்தனர்.
இதுபற்றி தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீகுமார் என்ற சிவகுமார் (23) என்பவர்தான் முன்விரோத தகராறில் கண்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
விசாரணையில் ஸ்ரீகுமார், 4 ஆண்டுகளாக மதுரவாயிலில் உள்ள, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று விட்டு 6 மாதங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.