காஞ்சிபுரம்
செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
|காஞ்சீபுரத்தில் செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் காஞ்சீபுரம் சங்கர மடம் அருகில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை யாரோ மர்ம நபர்கள் உடைத்து எடுத்து சென்றதும், கடையின் மின்விளக்குகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைதொடர்ந்து கடையை திறந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை அவர் ஆய்வு செய்தார். இதில் கடந்த 7-ந்தேதி இரவு 11.30 மணியளவில் காரில் வந்த 2 பேரில் ஒருவர் காரில் இருந்து கீழே இறங்கி கடையின் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி உடைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடையின் உரிமையாளர் சிவராமகிருஷ்ணன் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு ஆதாரத்துடன் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காஞ்சீபுரத்தில் இயங்கும் மற்றொரு செல்போன் கடை உரிமையாளர், தொழில்போட்டி காரணமாக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.