ஆசைவார்த்தை கூறி உல்லாசம்: பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
|காதலியை பலாத்காரம் செய்த காதலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே சித்தாமூரைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் பாலகுமார் (வயது 28), பெயிண்டர். இவர் 23 வயதுடைய ஒரு இளம்பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார்.
அப்போது பாலகுமார், அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இவர்களின் காதல் விவகாரம், அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததால் அவர், கடந்த 18.2.2020 அன்று பாலகுமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அதற்கு உடந்தையாக பாலகுமாரின் தந்தை அய்யனார், தாய் நாவம்மாள் ஆகியோரும் இருந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுமார், அய்யனார், நாவம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட பாலகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும், அய்யனார், நாவம்மாள் ஆகிய இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலகுமார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.