போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் பஸ் மோதி பலி
|விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் பஸ் மோதி பலியானார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த குண்டுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 27). இவர் கீழ்க்கதிர்ப்பூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 30 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு சென்றார்.
அப்போது மதுவிலக்கு பிரிவு போலீசார் அவரை வழிமறித்து பிடித்து விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பஸ் மோதி சாவு
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்த சீனிவாசன், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
அப்போது எதிரில் வந்த தனியார் பஸ் சீனிவாசன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை மறியல்
இது குறித்து தகவல் அறிந்த சீனிவாசனின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மக்கள் மன்ற நிர்வாகிகள், போலீசார் முறையாக அழைத்து வராததால் தான் மரணம் நிகழ்ந்துள்ளது என்று கூறி சீனிவாசனின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மரணத்துக்கு நீதி விசாரணை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
காஞ்சீபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சீனிவாசன் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படும் எனவும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
உயிரிழந்த சீனிவாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.