சேலம்
திருமணம் செய்வதாக கூறிசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைகடத்தலுக்கு உதவியாக இருந்த முதியவருக்கும் ஜெயில்
|திருமணம் செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்,
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அரங்கனூர் கல்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தம்மநாயக்கர். இவரது மகன் சுந்தர்ராஜ் (வயது 27). இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சுந்தர்ராஜ் மீதும், சிறுமியை கடத்த உதவியாக இருந்த சுந்தர்ராஜின் உறவினரான மேச்சேரி சீலநாயக்கனூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (71) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக சுந்தர்ராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், சிறுமியை கடத்த உதவியாக இருந்த குற்றத்திற்காக தங்கவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.