< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
வேலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
25 Jun 2023 11:06 PM IST

அணைக்கட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவி

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 25). அந்த பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் விசுவநாதன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை குடியாத்தத்துக்கு அழைத்துள்ளார்.

அதனை நம்பிய மாணவி பஸ்சில் கடந்த 22-ந் தேதி குடியாத்தம் சென்றார். விசுவநாதன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று மாணவியை அழைத்து கொண்டு அருகே உள்ள கமலாபுரம் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து விசுவநாதன் மற்றும் நண்பர்கள் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து மாணவி மற்றும் 3 பேரிடம் விசாரித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

அப்போது மாணவி நடந்த சம்பவத்தை பொதுமக்களிடம் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் விசுவநாதனை கண்டித்ததாகவும், அதனால் அவர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் மாணவியை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அன்றிரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றனர். மாணவியை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அந்த பகுதியில் உள்ள தோப்பிற்கு விசுவநாதன் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மறுநாள் காலை விசுவநாதன் மோட்டார் சைக்கிளில் மாணவியை குடியாத்தம் பஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து மாணவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக செல்போனில் நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் விசுவநாதன் வீட்டிற்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளனர்.

அப்போது அவருடைய பெற்றோர், இதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. அவன் வீட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் குழந்தை திருமணம், கடத்தல், போக்சோ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்குப்பதிந்து விசுவநாதனை தீவிரமாக தேடி வந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசுவநாதனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்