இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
|வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண்ணின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, அவரது தாய் திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
இளம்பெண்ணை பரிசோதனை செய்தபோது, அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கர்ப்பத்துக்கு காரணம் குறித்து மகளிடம் விசாரித்தபோது, கிளியனூர் பிள்ளையார்கோவில் வீதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஷாம் (வயது 21) என்பவர் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும், அதன் மூலம் கர்ப்பம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஷாம் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணின் பெற்றோர், தனது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு முறையிட்டனர். அப்போது சம்மதம் தெரிவித்த ஷாம், அதன்பின் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாமை கைது செய்தனர். பின்னர் அவரை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.