செங்கல்பட்டு
குழந்தையின் கண்முன்னே கொடூரம் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்
|மறைமலைநகரில் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
மறைமலைநகர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட நின்னக்கரை ராஜீவ் காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் என்கிற சுந்தரேசன். எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதின் (வயது 26). இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சுந்தர், சுதின் இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்து நண்பர்களாக பழகி வந்தனர். இதன் காரணமாக சுந்தர் வீட்டுக்கு சுதின் அடிக்கடி வந்து சென்றார். சுந்தரின் மனைவி தாரணிக்கும் சுதினுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து அடிக்கடி சுதின், தாரணி இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
தனது நண்பர் சுதின் தனது மனைவியுடன் தவறான நோக்கத்தில் பழகி வந்ததை தெரிந்துகொண்ட சுந்தர் தனது நண்பரையும், மனைவியையும் கண்டித்தார். இருப்பினும் சுதின் தொடர்ந்து தாரணிவுடன் பழகி வந்தார்.
சமீப காலமாக கள்ளக்காதலி தாரணி சுதினை உதாசீனப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுதின் நேற்று மதியம் வழக்கம் போல் தனது நண்பர் சுந்தர் வீட்டுக்கு கள்ளக்காதலி தாரணியை பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது சுந்தர் வேலைக்கு சென்றிருந்தார். தாரணி மற்றும் அவரது 2 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.
அப்போது சுதின், கள்ளக்காதலி தாரணியிடம் ஏன் என்னிடம் பழகுவதை தவிர்த்து வருகிறாய்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சுதின் தாரணியை அவரது 2 வயது மகள் கண் முன்னே கத்தியால் வெட்டியும், அரிவாள்மனையால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே தாரணி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சுதின் அங்கிருந்து நேராக மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து அங்கு இருந்த போலீசாரிடம் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்தை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதினிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த தாரணியின் கணவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.