சென்னை
வியாசர்பாடியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு
|வியாசர்பாடியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீர் உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 27). இவர், கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏஜெண்டாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக், வியாசர்பாடியில் உள்ள சாலையோர கடையில் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.
அப்போது திடீரென இரவு 11 மணி அளவில் கார்த்திக் வாந்தி எடுத்து மயங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புரோட்டா சாப்பிட்டதால் கார்த்திக் இறந்தாரா? என்பது தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அனைவரும் புரோட்டா சாப்பிட்ட நிலையில் கார்த்திக் மட்டும் வாந்தி எடுத்து இறந்து இருப்பதால் அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கார்த்திக் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.