செங்கல்பட்டு
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை
|தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலை பொன்மாரில் டாஸ்மாக் கடை அருகே வனப்பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பீர் பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை செய்திருப்பதும், இறந்து கிடந்த வாலிபரின் அருகே மதுபாட்டில்கள் இருந்ததால் மது போதையில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் பொன்மாரை அடுத்துள்ள மதுரப்பாக்கம் மந்தைவெளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரது மகன் லோகநாதன் (வயது 20) என்பதும் சேலையூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது இருப்பதும். மேலும் பெண் ஒருவரின் கொலை வழக்கில் ஜாமினில் வெளியில் வந்திருப்பதும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு லோகநாதன் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி டாஸ்மாக் கடை அருகே உள்ள காலி இடத்தில் மது குடித்ததாக தெரிகிறது.
அவருடன் நண்பர்கள் யாரேனும் இருந்தனரா? அல்லது தனியாக வந்து மது வாங்கி குடிக்கும்போது அவரை பின்தொடர்ந்து வந்த யாரேனும் லோகநாதனை தீர்த்து கட்டினரா? என்று டாஸ்மாக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தாழம்பூர் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
லோகநாதன் மீது ஏற்கனவே சேலையூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக யாரவாது கொலை செய்திருக்கலாம் எனவும் அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.