நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் படுகொலை
|நெல்லை அருகே பழிக்குப்பழியாக வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு அவரை கடத்திச்சென்று 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர்
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியைச் சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லையில் வேளாண்மைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று கார்த்திக் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சிமுத்துவுடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே நான்குவழிச்சாலையில் பிலாக்கொட்டைபாறை என்ற பகுதியில் வரும்போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது.
காரில் கடத்தினர்
அந்த கார் திடீரென்று கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது, காரில் இருந்து திபுதிபுவென சுமார் 4 பேர் கொண்ட மர்மகும்பல் கீழே இறங்கியது. அந்த கும்பல் கார்த்திக்கை தாக்கி தங்களது காரில் கடத்திச் சென்றனர்.சிறிது காயங்களுடன் கிடந்த பேச்சிமுத்து இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர்.
முட்புதரில் உடல்
இன்று காலையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள சாலையோர முட்புதர் பகுதியில் ஒருவரது உடல் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து ஏர்வாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். உடல் மட்டும் கிடந்ததால் அவர் யார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து தலையை தேடினார்கள். உடல் கிடந்த இடத்துக்கு சிறிது தொலைவில் தலையும் கிடந்தது. தொடர்ந்து மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பணகுடி போலீசாரும் அங்கும் வந்தனர். அப்போது, உடல், தலையை வைத்து பார்த்தபோது, அவர் கார்த்திக் என்பது தெரியவந்தது.
கொலை வழக்கு
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நெல்லை பேட்டை பகுதியில் பார் உரிமையாளரான பிச்சைராஜ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேற்று கார்த்திக் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்துவிட்டு தனது நண்பருடன் திரும்பி வந்து கொண்டு இருந்தார். நான்குவழிச்சாலையில் வந்தபோது, பின்னால் காரில் வந்த மர்மகும்பல் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு, அவரை கடத்திச் சென்றனர்.
தலை துண்டித்து கொலை
பின்னர் ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தில் முட்புதரில் வைத்து கார்த்திக்கின் கழுத்தை ஆடு அறுப்பது போல் அறுத்து தலையை துண்டித்தனர். அந்த தலையை சிறிது தூரத்தில் வீசிவிட்டு மர்ம கும்பல் தங்களது காரில் தப்பிச் சென்றுவிட்டனர். எனவே பிச்சைராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக கார்த்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கார்த்திக் உடல், தலையை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே காரில் கடத்தி வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.