திண்டுக்கல்
லாரி மோதி வாலிபர் பலி
|மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 26). கோபி பகுதியை சேர்ந்தவர் பிரபு. கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். 3 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் விருதுநகரில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சத்தியநாதபுரம் பிரிவு அருகே அவர்கள் வந்த போது எதிரே மண் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரவிந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
---