சென்னை
பள்ளிக்கரணையில் இளம்பெண் ஓட்டிய கார் மோதி வாலிபர் பலி - மேலும் 3 பேர் படுகாயம்
|பள்ளிக்கரணையில் இளம்பெண் ஓட்டிவந்த கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் வாலிபர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிம் ரெய்யோ ஜிமிக்கி (வயது 40). இவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அழகு நிலையத்தில் சிகை அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்றார்.
அப்போது பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் சிக்னல் அருகே வந்த போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், ஷிம் ரெய்யோ ஜிமிக்கி வந்த மோட்டார்சைக்கிள் உள்பட 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த ராஜா (26), சிவா (25), முரளி (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் விபத்தில் பலியான ஷிம் ரெய்யோ ஜிமிக்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டிவந்த மணலி புதுநகரை சேர்ந்த மேரி சோபியா (26) என்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.