செங்கல்பட்டு
மாமல்லபுரம் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் கொலை; 3 பேர் கைது
|மாமல்லபுரம் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தகராறு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருபவர் ராமச்சந்திரன் (வயது 33). குடை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று (திங்கட்கிழமை) திருப்போரூர் முருகன் கோவிலில் நடைபெற உள்ள குழந்தைகளின் காதணி விழாவுக்கு வருமாறு தனது உறவினர்களான செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த உறவினர்கள் தமிழரசன் என்கிற சின்னதம்பி (28), சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாண்டியன் (26), விக்னேஷ் (25) ஆகியோருக்கு செல்போன் மூலம் பேசி அழைப்பு விடுத்தார். மேலும் ஒரு நாள் முன்னதாகவே வருமாறு ராமச்சந்திரன் விடுத்த அழைப்பை ஏற்ற சின்னதம்பி, பாண்டியன், விக்னேஷ் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு பட்டிபுலம் பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் 3 பேருடன் சேர்ந்து ராமச்சந்திரன் மது குடித்தார். மதுபோதை அதிகமானதால் சின்னதம்பியுடன் ராமச்சந்திரன், விக்னேஷ், பாண்டியன் 3 பேரும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
கொலை
ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறியதால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து உருட்டைக்கட்டையால் சின்னதம்பியை தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சின்னதம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த ராமச்சந்திரன், விக்னேஷ், பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். சின்னதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.