செங்கல்பட்டு
நாவலூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
|நாவலூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் பீரவின்குமார் (வயது 27). எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தாழம்பூர்-காரணை சந்திப்பில் இருந்து நாவலூர் நோக்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அதே சாலையில் அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி நிலைதடுமாறி பிரவீன்குமார் கீழே விழுந்தார்.
சாவு
அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.