செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை
|செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு அடுத்த பாரதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜேஷ் கண்ணா (வயது22). மினி வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இரவு நேர காவலாக ராஜேஷ் கண்ணா, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் இருந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதிக்கு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் விநாயகர் சிலைக்கு காவலில் இருந்த ராஜேஷ் கண்ணாவை சிலை அருகே வைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் கண்ணா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்படைகள் அமைத்து கொலை வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே புதுங்கியிருந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அவர்கள் செங்கல்பட்டு அடுத்த மலாலிநத்தம் பகுதியை சேர்ந்த கூட்ரோடு நாகராஜன் (35), ராஜேஷ் (28), ஜீவா (23), ரமேஷ் (25), அஜித் (26), லோகேஷ் (26), பார்த்திபன் (32) என்பது தெரியவந்தது.
விசாரணையில் ராஜேஷ் கண்ணா அவரது நண்பர்களான சந்தோஷ் மற்றும் பிரபா ஆகியோருடன் மலாலிநத்தம் பகுதியில் கடந்த வாரம் மது குடித்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் அவர்களின் முகத்தில் டார்ச் அடித்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தோஷ், பிரபா, ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோருக்கும் ராஜேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து ராஜேஷ் கண்ணாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர் அதன்படி ராஜேஷ்கண்ணா விநாயகர் சிலைக்கு காவல் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்று ராஜேஷ் கண்ணாவை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ராஜேஷ் கண்ணா கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் 12 மணி நேரத்தில் கைது செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.