< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை- வீடு புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை- வீடு புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
5 March 2023 2:24 PM IST

ஆவடி அருகே வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடியை அடுத்த பொத்தூர் வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 32). இவர், நேற்று இரவு பொத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள், வீடு புகுந்து அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கொலையான யோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சதாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

யோகேஸ்வரனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனைவி, குழந்தையுடன் பொத்தூரில் வசித்து வந்தார். 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சுறா என்பவரை யோகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகவும், அந்த வழக்கில் சிறைக்கு சென்ற யோகேஸ்வரன் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தர்மபுரி பகுதிக்கு சென்று அங்கு தங்கி இருந்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் பொத்தூர் வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இதை அறிந்த சுறாவின் ஆதரவாளர்கள் சுமார் 15 பேர் சுறா கொலைக்கு பழிக்குப்பழியாக நேற்று இரவு யோகேஸ்வரன் வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டிக்கொலை செய்திருக்கலாம் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்