< Back
மாநில செய்திகள்
ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தல்; வாலிபர் சிக்கினார்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தல்; வாலிபர் சிக்கினார்

தினத்தந்தி
|
6 Sept 2022 1:07 AM IST

பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் வகையில் இருக்கையின் கீழே இருந்த பையை திறந்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால் பையை கொண்டு வந்த நெல்லை சுப்பையாபுரத்தை சேர்ந்த சேவியர் (வயது 30) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் பெங்களூருவில் புகையிலை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி நெல்லையில் அதிக விலைக்கு விற்க கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கடத்தி வந்த 31 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சேவியரை கைது செய்தனர்.



Related Tags :
மேலும் செய்திகள்