சென்னை
மதுரவாயல் அருகே இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை
|மதுரவாயல் அருகே இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவருடைய தாய் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாய்-மகன் மயங்கி கிடந்தனர்
மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் அரி (வயது 45). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (38). இவர்களுடைய மகன் பூவரசன் (23). இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அரி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தாய்-மகன் மட்டும் இருந்தனர். நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். இருவரது தலையிலும் இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
உயிரிழந்தார்
இது குறித்து தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், தாய்-மகன் இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக இறந்தார். செல்வி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி மதுரவாயல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த செல்வியிடம் போலீசார் விசாரித்தபோது, "எனது மகனை நான் தான் இரும்பு கம்பியால் அடித்து விட்டேன்" என கூறினார். அப்படியானால் உங்களை தாக்கியது யார்? என கேட்டபோது அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
தாய்-மகன் வீட்டில் தனியாக இருந்தபோது கொள்ளையடிக்கும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் இரும்பு கம்பியால் இருவரையும் தாக்கி விட்டு தப்பினார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது வீடு புகுந்து இருவரையும் தாக்கினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவே அரி வேலைக்கு சென்று விட்டார். எனவே முன்னதாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் அரியே தனது மனைவி மற்றும் மகனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு வேலைக்கு சென்று விட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.