செங்கல்பட்டு
மறைமலைநகர் நகராட்சியில் பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது
|மறைமலைநகர் நகராட்சியில் பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 25 பவுன் நகை, செல்போன், வாட்ச், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்கரணை பகுதியில் வசிக்கும் கல்லூரி பேராசிரியை புனிதமலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ளகண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
அதே போல பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையில் விலை உயர்ந்த ஒரு செல்போன், ஒரு வாட்ச், ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது 2 இடங்களிலும் திருடியது ஒரே நபர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மறைமலைநகர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் வழிமறித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் சென்னை போரூர் ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் (வயது 30) என்பதும், இவர் கடந்த ஏப்ரல் மாதம் கீழக்கரணை பகுதியில் உள்ள பேராசிரியையின் வீடு, மற்றும் பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிரேம் குமாரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள், ஒரு விலை உயர்ந்த செல்போன், ஒரு வாட்ச், ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிரேம்குமாரை செங்கல்பட்டு கோர்ட்டில் மறைமலைநகர் போலீசார் ஆஜர்படுத்தினர்.