காஞ்சிபுரம்
வாலாஜாபாத் அருகே கஞ்சா போதையில் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த வாலிபர் கைது
|வாலாஜாபாத் அருகே கஞ்சா போதையில் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கத்திமுனையில் மிரட்டல்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஏகனாம் பேட்டை கிராமம் செல்லியம்மன் நகர் பகுதியில் கஞ்சா போதையில் கையில் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் வசிக்கும் குமார் என்பவரிடம் தகராறு செய்தார். அதனை தொடர்ந்து கையில் பட்டாகத்தியுடன் அருகில் இருந்த கலைவாணி என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கு டி.வி. பார்த்து கொண்டிருந்த குழந்தைகளை கத்திமுனையில் மிரட்டி உள்ளார். இதனால் மிரண்டு போன குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில், வெளியே இருந்த கலைவாணி தனது வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி உள்ளார்.
அடித்து உடைத்தார்
இதனால் கோபம் அடைந்த போதை வாலிபர் வீட்டுக்குள் உள்தாழ்பாள் போட்டு கொண்டு உள்ளே இருந்த வீட்டு உபயோக பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கலைவாணி வாலாஜாபாத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், வீட்டின் உள்ளே இருந்த வாலிபரை வெளியே வரவழைத்தனர். அவர் வெளியே வராததால், போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கஞ்சா போதையில் மயங்கி கிடந்த வாலிபரை வெளியே அழைத்து வந்தனர். அவர் வைத்திருந்த பட்டாகத்தியையும் கைப்பற்றினர்.
போலீஸ் விசாரணையில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர் வாலாஜாபாத் தாலுகா வெண்குடி கிராமத்தை சேர்ந்த அஜித் (வயது 22) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்தை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.