சென்னை
ஓடும் ரெயிலில் ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்
|ஓடும் ரெயிலில் ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபரை கல்லூரி மாணவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் மதியம் வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் சேப்பாக்கம் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பின்னர் ரெயில் மீண்டும் புறப்பட்டபோது மர்ம நபர் ஒருவர் ரெயிலில் இளம்பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். உடனடியாக அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அப்போது ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தனர். இதற்கிடையே அந்த வழியாக வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவரான விக்னேஷ், வேகமாக ஓடிவந்து கொண்டிருந்த மர்மநபரை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் விக்னேசை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு தப்பித்து ஓடினான். ஆனாலும் சாமர்த்தியமாக அவரை பிடித்த விக்னேஷ், ரெயில் பயணிகளுடன் சேர்ந்து அருகில் உள்ள திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றதால் ரெயில்வே போலீசிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கவே எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். வழிப்பறியில் ஈடுபட்ட அவரை ரெயில்வே போலீசார் விசாரணை செய்ததில் அவரின் பெயர் சூர்யா (வயது 19) என்பதும், அவரின் தந்தை பெயர் ஜெய் கணேஷ் என்பதும் தெரியவந்தது. செல்போனை பறிகொடுத்த பெண் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் கிருஷ்ணபிரியா என்பது தெரியவந்தது. லாவகமாக செல்போன் திருடனை ரெயில்வே போலீசாரிடம் பிடித்து கொடுத்த கல்லூரி மாணவர் விக்னேசை ரெயில்வே போலீசார் கேடயம் வழங்கி பாராட்டினர்.