செங்கல்பட்டு
பெருங்குடியில் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்
|புதிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பியதால் ஆத்திரத்தில் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைதானார்.
கூரை வீட்டில் தீ
சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகர் 5-வது தெருவில் உள்ள மாடி வீட்டில் பெண் ஒருவர் தனது 20 மற்றும் 18 வயது மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் அந்த பெண்ணின் தாயாரும் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் தனது மூத்த மகளுடன் ஓட்டு வீட்டிலும், அவருடைய இளைய மகள், பாட்டியுடன் அருகில் உள்ள கூரை வீட்டிலும் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு எழுந்த பெண், கூரை வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் தூங்கிய தனது இளைய மகள் மற்றும் தாயாரை வெளியே அழைத்து வந்துவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சிலிண்டர் வெடித்து சிதறியது
அதற்குள் வீடு முழுவதும் தீ பரவியது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அங்கு இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து, அருகில் 4-வது தெருவில் வசித்து வந்த சத்யமூர்த்தி என்பவரது ஓட்டு வீட்டுக்குள் விழுந்தது.தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள், உணவு பொருட்கள், அரசு அடையாள அட்டைகள், கட்டில், பீரோ உள்ளிட்டவை தீக்கிரையாகின.
வாலிபர் கைது
இது குறித்து துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த பெண்ணின் இளைய மகள், கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் அறிந்து அந்த பெண் கண்டித்ததால், அவரது மகள் காதலனுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, தனது முன்னாள் காதலி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும், அதில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததும் தெரிந்தது. இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பதுங்கி இருந்த சூர்யாவை கைது செய்தனர்.
வெறுப்பேற்றியதால் ஆத்திரம்
அப்போது போலீசாரிடம் சூர்யா கூறும்போது, "அந்த பெண் என்னை திடீரென காதலிக்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் பள்ளிக்கரணையை சேர்ந்த வேறு ஒரு வாலிபரை காதலித்து வந்தார். புதிய காதலனுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பி வெறுப்பேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அந்த பெண்ணை கொலை செய்வதற்காக அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினேன்" என்றார்.
கைதான சூர்யாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.