சென்னை
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் - சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்
|சென்னை பரங்கிமலையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், கல்லூரி மாணவியின் கழுத்தில் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவை சேர்ந்தவர் அனந்த ராமகிருஷ்ணன். இவரது மகள் அஷ்மிதா (வயது 18). இவர் அடையாறு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அஷ்மிதா பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்த நவீன் (22) என்பவருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென நவீனுடன் நட்பை துண்டித்து விட்டு அவருடன் பேசுவதை அஷ்மிதா தவிர்த்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அஷ்மிதா வழக்கம் போல் அடையாறில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பரங்கிமலை ஏழுகிணறு 2-வது தெரு பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நவீன் அவரை வழிமறித்து தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். ஆனால் அஷ்மிதா அதனை மறுக்கவே, ஆத்திரமடைந்த நவீன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஷ்மிதாவின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி அஷ்மிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அஷ்மிதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். அப்போது மாணவியை குத்தி விட்டு தலைமறைவான நவீனை தீவிரமாக தேடினர். இதைடுத்து போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த நவீனை கண்டறிந்தனர்.
ஆனால் போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓட முயன்றார். இதைத்தொடர்ந்து, சினிமா பாணியில் போலீசார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது நவீன் தவறி கீழே விழுந்ததில் மயக்கம் அடைந்தார். உடனே போலீசார் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.