புதுக்கோட்டை
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
|புதுக்கோட்டையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலிபர் பிணம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கருவேப்பிலான் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டனர். இதில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 28) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். மேலும் திருக்கோகர்ணம் போலீசாரும் விரைந்து வந்தனர். இதற்கிடையில் அந்த நேரத்தில் திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற ரெயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளம் அருகே பொதுமக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த அந்த ரெயிலின் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். மேலும் பொதுமக்களும் சைகை காண்பித்தனர்.
சாலை மறியல்
இதையடுத்து தண்டவாளத்தில் இருந்து சுந்தரின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின் ரெயில் புறப்பட்டு சென்றது. இதற்கிடையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசியிருக்கலாம் என கோரி அவரது உறவினர்கள் திருச்சி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
மேலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இது குறித்து சந்தேக மரணமாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக கிடந்த வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.