பெரம்பலூர்
வனப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
|வனப்பகுதியில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று மதியம் ஒரு வாலிபர், மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தூக்கில் தொங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் மில்லத் நகர், அல்கோசர் தெருவை சேர்ந்த காதர்கானின் மகன் முகம்மது சலீம்(வயது 28) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை வி.களத்தூரில் ஒரு கோவில் தேரை கொளுத்த முயன்ற சம்பவத்தில் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.