< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளை ஏற்றி தொழிலாளியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளை ஏற்றி தொழிலாளியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
3 Oct 2023 9:52 PM IST

பெண்ணிடம் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடியபோது தன்னை பிடிக்க வந்த தொழிலாளியை மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் அருகே கீழக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரேகா (வயது 33). இவர் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 27-ந் தேதி மொபட்டில் கீரனூர்-இலுப்பூர் சாலையில் துலுக்கம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இலுப்பூர் அருகே சேதுராப்பட்டியை சேர்ந்த சின்னராசு என்கிற சின்னராஜ் (24), ரேகாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து விட்டு தப்பினார். அவரை பின்தொடர்ந்து விரட்டிக்கொண்டு ரேகாவும் மொபட்டில் சென்றார்.

அதேநேரத்தில் சங்கிலியை பறித்து கொண்டு திருடன் தப்பிச்செல்கிற தகவல் அறிந்ததும் அந் த வழியில் மோட்டார் சைக்கிளை மறித்து அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அவர்களுடன் சேர்ந்து எஸ்.நாங்குப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஆனந்த முத்துக்குமார் (48) அந்த திருடனை பிடிக்க முயன்றார். அப்போது ஆனந்த முத்துக்குமார் மீது மோட்டார் சைக்கிளை வேகமாக ஏற்றிவிட்டு சின்னராசு தப்பி சென்றுவிட்டார்.

ஆயுள் தண்டனைபெண்ணிடம் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடியபோது தன்னை பிடிக்க வந்த தொழிலாளியை மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆனந்த முத்துக்குமார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பெண்ணிடம் சங்கிலியை பறித்ததற்கும், தொழிலாளியை கொலை செய்ததற்கும் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிந்து சின்னராசுவை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் பெண்ணிடம் சங்கிலியை பறித்ததற்கு சின்னராசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை வழக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட சின்னராசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் புலன் விசாரணை செய்த அப்போதைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.

மேலும் செய்திகள்