காஞ்சிபுரம்
சுங்குவார்சத்திரம் அருகே கார் மோதி வாலிபர் பலி ; உரிமையாளர் கைது
|சுங்குவார்சத்திரம் அருகே கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (25). இவர்கள் இருவரும் மொளச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பண்ணுர் பகுதியை சேர்ந்த பங்கிராஜ் (62) என்பவர் காரில் வந்தபோது விஷ்ணுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்தனர். விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
சாவு
ஆத்திரத்தில் இருந்த பங்கிராஜ் காரை வேகமாக ஓட்டி சென்று விஷ்ணு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி பங்கிராஜை கைது செய்தனர்.