திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது மின்கம்பத்தில் தலை மோதி வாலிபர் பலி
|திருவள்ளூர் அருகே ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது மின்கம்பத்தில் தலை மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஏ.சி.மெக்கானிக்
அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் தெரு யூனியன் பேங்க் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது குடும்பத்தினருடன் திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் முரளி (வயது 23). ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து இவர் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.
சாவு
வேப்பம்பட்டு - செவ்வாய்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் வந்து கொண்டிருந்தபோது இவர் ரெயில் பெட்டியில் வெளியே நின்றுரெயில் சென்று கொண்டிருந்த போது எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது தண்டவாளம் ஓரம் இருந்த மின் கம்பத்தில் இவரது தலை பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உயிரிழந்த முரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.