திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே பழுதான மிக்சியை சரிபார்த்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
|திருவள்ளூர் அருகே பழுதான மிக்சியை சரிபார்த்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மிக்சி பழுது
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பனையஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 23). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நர்மதா (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நர்மதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நர்மதா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பழுதான மிக்சியை குப்பன் பிரித்து பழுது நீக்கி கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி...
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குப்பன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நர்மதா கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குப்பனை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.