< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலி

தினத்தந்தி
|
7 April 2023 2:56 PM IST

26-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

புகைப்பட கலைஞர்

ராணிப்பேட்டை மாவட்டம் வெம்பாக்கத்தை அடுத்த சிறுவஞ்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்வரி. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 28). ஒரு மகளும் உள்ளார். சென்னை திருவேற்காடு அருகே புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தான் பணிபுரியும் பகுதியின் அருகாமையில் வசிக்கும் 23 வயதுடைய பெண்ணை காதலித்து வந்தார். குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த மாதம் 26-ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் மோகன்ராஜ் தனது சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் செல்லும்போது சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கூட்டமாக இருந்ததால் அந்த வழியாக வந்த லாரி டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார்.

சாவு

அப்போது லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த மோகன்ராஜ் லாரியின் பின்புறம் மோதினார். இதில் மோகன்ராஜ் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து ஆதரவற்ற முதியவர் மற்றும் மோகன்ராஜ் இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்