செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே டெம்போ விபத்தில் வாலிபர் பலி
|மதுராந்தகம் அருகே டெம்போ விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 27). இவர் தன்னுடைய நண்பர்கள் 3 பேர் மற்றும் டிரைவர் ராஜா (32) ஆகியோருடன் மினி டெம்போவில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி கருங்கல் தூண்கள் மற்றும் கம்பி வேலிகளை ஏற்றி சென்றார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலாவட்டம் பகுதியில் செல்லும்போது சாலையோரம் இருந்த பாலத்தடுப்பில் மினி டெம்போ மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி டெம்போவின் மேல் தூங்கி கொண்டிருந்த வினோத்தின் தலையில் கருங்கல் தூண்கள் விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் பயணம் செய்தவர்கள் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.