திருவள்ளூர்
வீட்டு சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
|பள்ளிப்பட்டு அருகே வீட்டு சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
விபத்து
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மடம் தெருவை சேர்ந்தவர் ஜெயிலா. இவரது மனைவி பானு. இவர்களுக்கு ரியாஸ் (வயது 30), இப்ராஹிம் (21) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இப்ராஹிம் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு பள்ளிப்பட்டு அருகே புதுப்பட்டு கிராமத்திற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி வழியிலிருந்த வீட்டு சுவற்றில் மோதியதில் இவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பலி
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோனேட்டம் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இப்ராஹிம் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.