செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
|மதுராந்தகம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடுக்கலூரை சேர்ந்தவர் ஷாருக்கான் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (20) கோசலராமன் (22). இவர்கள் 3 பேரும் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கள் சொந்த ஊரான கடுக்கலூருக்கு சென்று விட்டு இரவு 1 மணி அளவில் தாம்பரத்திற்கு திரும்பினர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது ஷாருக்கான் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த நண்பர்கள் படுகாயம் அடைந்து மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், ஷாருக்கானின் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.