திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
|இளநீர் பறிக்க முயன்றபோது, தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.
கூலித்தொழிலாளி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள சாலையான்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜ்குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி அஸ்விதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று ரெட்டம்பேட்டில் உள்ள உறவினர் ஒருவரின் தென்னந்தோப்பிற்கு வந்திருந்த ராஜ்குமார், அங்கிருந்த தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க முற்பட்டார்.
தவறி விழுந்து பலி
அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த அவர், படுகாயம் அடைந்தார். இதனையடுத்து உறவினர்கள் ராஜ்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.