< Back
மாநில செய்திகள்
கண்டிகை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கண்டிகை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
16 April 2023 2:50 PM IST

கண்டிகை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை பட்டாபிராம் பாரதியார் நகர், மருதம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 21), டிப்ளமோ படித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கார்த்திகேயன் வண்டலூரை அடுத்த கண்டிகை அருகே உள்ள கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார்த்திகேயன் ஆழமான பகுதிக்கு சென்றார்.

நீச்சல் தெரியாத காரணத்தால் கல்குவாரி குட்டையில் தத்தளித்து மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கு இருந்த கிராம மக்கள் உடனே மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும் மற்றும் காயார் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் கல்குவாரி குட்டையில் நீண்ட நேரம் நீரில் மூழ்கிய கார்த்திகேயனின் உடலை தேடியும் உடலை மீட்க முடியவில்லை.

இரவு ஆகிவிட்டதால் வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்கும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினர். இதனையடுத்து நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்து போன கார்த்திகேயன் உடலை பல மணி நேரம் போராடி மீட்டனர். மீட்கப்பட்ட உடலை காயார் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன கார்த்திகேயனுடன் கல்குவாரி குட்டையில் குளித்த சக நண்பர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே கல்குவாரி குட்டையில் ஒரு கல்லூரி மாணவர் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பள்ளி கல்லூரிகள் விடுமுறை தினங்களில் சென்னை புறநகர் பகுதியை ஒட்டியுள்ள கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் தினந்தோறும் வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கீரப்பாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்