திருவள்ளூர்
கடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
|பழவேற்காடு கடலில் குளித்து கொண்டிருந்தபோது வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
பொன்னேரி அடுத்த ஆமுர் வடக்குபட்டு கிராமம் உள்ள சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் பிரேம்குமார் (வயது 19). இவர் தச்சூர் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் பொழுதுபோக்கை கழிக்க பழவேற்காடுக்கு சக நண்பர்களுக்கு 3 பேருடன் சென்றார். பின்னர் நேற்று மாலை பழவேற்காடு லைட்ஹவுஸ்குப்பம் அருகே உள்ள கடற்கரையில் நண்பர்களுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுடன் கரையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மற்றொரு நண்பர்களுடன் பிரேம்குமார் கடலில் இறங்கி குளிக்க சென்றார்.
இந்நிலையில் காற்றின் வேகம் அதிகரித்ததால் கடலில் ராட்சத அலை ஏற்பட்டு பிரேம்குமாரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் நின்ற மீனவர்கள் ஓடி வந்து பிரேம்குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து திருப்பாலைவனம் போலீசார் கடல் அலையில் சிக்கி பலியான பிரேம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.