பெரம்பலூர்
இரும்பு தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி
|இரும்பு தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
பாடாலூர்:
நண்பர்கள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை நடுத்தெருவை சேர்ந்த வரதமலையான் மகன் அழகர் (வயது 34). இவரும், காரை சன்னதி தெருவை சேர்ந்த கணேசனின் மகன் சின்னதுரை(34), காரை கவுண்டர் தெருவை சேர்ந்த சோலமுத்துவின் மகன் பிரபு(25) ஆகிேயாரும் நண்பர்கள் ஆவார்கள்.
காரை பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் அழகர் ஹிட்டாச்சி எந்திர ஆபரேட்டராகவும், சின்னதுரை, பிரபு ஆகியோர் பொக்லைன் ஆபரேட்டராகவும் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களாக அவர்கள் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.
இரும்பு தடுப்பு மீது மோதியது
இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பெரம்பலூர் வந்துவிட்டு இரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அழகர் ஓட்டினார். இரவு 9.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் பிரிவு சாலை அருகே அவர்கள் சென்றனர். அப்போது அழகரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பி (பேரிகார்டு) மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அழகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பாடாலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். பின்னர் அழகரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிராம மக்கள் சோகம்
மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் ஹெல்மெட் (தலைகவசம்) அணியவில்லை. இறந்த அழகருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து நடந்து வரும் சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.