காஞ்சிபுரம்
பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தற்கொலை
|பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் கிறிஸ்தவ பாதிரியாருக்கு படிக்கும் தனியார் கல்லூரி உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 30) என்பவர் இந்த கல்லூரி விடுதியில் தங்கி பாதிரியாருக்கான படிப்பை படித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு ஜஸ்டின் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்த ஜஸ்டின், மீண்டும் கல்லூரி விடுதியில் உள்ள அறையில் தனியாக தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் விடுதியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் ஜஸ்டின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தற்கொலைக்கு முன்னதாக ஜஸ்டின், செல்போனில் ஒரு பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண், கல்லூரி விடுதி அலுவலகத்துக்கு போன் செய்து, ஜஸ்டின் தனது அறையில் தற்கொலை செய்யப்போவதாக கூறி உள்ளார். அதன்பிறகே அங்கிருந்தவர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஜஸ்டின் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. ஜஸ்டின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.