ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை... காதலியுடன் தகராறா?
|பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி மாவட்டம், துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் அடைக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பஸ்சில் செல்போனில் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று நான் பஸ்சில் இருந்து கீழே குதித்து சாகப்போகிறேன் என்று சத்தமாக கூறியபடி படிக்கட்டுக்கு வந்து வெளியே குதித்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் அந்த வாலிபரை மீட்க ஓடினர். ஆனால் கீழே குதித்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்?, அவா் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் திருச்சி மாவட்டம், துறையூர் தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் வினோத் (வயது 21) என்பதும், அவர் அங்குள்ள பூக்கடை ஒன்றில் பூ கட்டும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் வினோத் பெரம்பலூருக்கு வந்து விட்டு இரவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்த போது இந்த சம்பவம் அரங்கேறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வினோத், பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்து வினோத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் இருந்து வாலிபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.