திருவண்ணாமலை
உயிர் நண்பன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|போளூர் அருகே உயிர் நண்பன் இறந்த துக்கத்தில் தினமும் சுடுகாட்டுக்கு சென்று கண்ணீர் சிந்திய வாலிபர் துக்கம் தாங்காமல் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதால் சோகம் ஏற்பட்டது.
போளூர்
போளூர் அருகே உயிர் நண்பன் இறந்த துக்கத்தில் தினமும் சுடுகாட்டுக்கு சென்று கண்ணீர் சிந்திய வாலிபர் துக்கம் தாங்காமல் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதால் சோகம் ஏற்பட்டது.
உயிர் நண்பர்
போளூரை அடுத்த எழுவாம்பாடி சேர்ந்தவர் சங்கர் இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகன்கள். ஒரு மகள்.
இதில் 2-வது மகன் சஞ்சய் எழுவாம்பாடியில் உள்ள பாட்டி வசந்தா வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது சஞ்சய் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து சஞ்சய்யை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைத்தனர்.
ஆம்புலன்சில் அழைத்து செல்ல பணம் இல்லாததால் கடந்த 11-ம் தேதி மாலை அரசு பஸ்சில் சஞ்சய்யை சென்னைக்கு பெற்றோர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வழியில் அவர் இறந்து விட்டார்.
தனது மகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்று பெற்றோருக்கு தெரியவில்லை. இது குறித்து அவர்கள் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உருக்கமான தகவல்கள் கிடைத்தன. சஞ்சய் அதே ஊரைச் சேர்ந்த கவியரசு மகன் சந்தோஷ் என்பவருடன் மாம்பட்டு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார்.
இருவரும் உயிர் நண்பர்களாக பழகி வெளியில் சுற்றி உள்ளனர். 10-ம் வகுப்பில் இருவருமே தேர்ச்சி பெறாமல் படிப்பை தொடராமல் 2 ஆண்டுகளாக கூலி வேலைக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் 2 பேருமே வேலைக்கு செல்ல மாட்டார்களாம்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சந்தோசை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிருக்கு உயிராக பழகி வந்த சந்தோஷ் இறந்ததால் சஞ்சய் மன உளைச்சலுடன் இருந்து வந்தார். உடல் அடக்கம் செய்த சுடுகாட்டுக்கு சென்று தினமும் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.
இரவு நேரத்தில் தூங்காமல், என் நண்பன் என்னை கூப்பிடுகிறான் அதனால் நான் அவனிடம் போகிறேன் என்றும், நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன். என் நண்பன் இடத்திற்கே போகிறேன் என்று தாயாரிடம் செல்போன் மூலம் கூறியுள்ளார்.
ஆனால் பெற்றோர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஏதோ விரக்தியில் பேசினான் என்று நினைத்து விட்டனர்.ஆனால் சஞ்சய் கூறியபடியே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உயிர் நண்பனை பிரிந்த வேதனையில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எழுவாம்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.