செங்கல்பட்டு
பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தி்ல் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
|பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தி்ல் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் காலனியை சேர்ந்தவர் செல்வா (வயது 38). இவருக்கு வாணி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தினக்கூலி வேலை செய்து வந்த செல்வா மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தனது மனைவியுடன் தினந்தோறும் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் வாணி அவரை விட்டு பிரிந்து கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி இல்லாத ஏக்கத்தில் தவித்த செல்வா மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி நேற்று மதுபோதையில் புதுப்பட்டினம்-விட்டிலாபுரம் சாலையில் 150 அடி உயரம் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு தனது மனைவியை தன்னுடன் சோ்த்து வைக்க வேண்டும். இல்லை என்றால் செல்போன கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன். யாராவது தன்னை மீட்க மேலே வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த கல்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க அறிவுறுத்தினர். அதற்கு உடன்பட்டு அவர் கீழே இறங்க மறுத்ததால், உடனடியாக அவரது உறவினர்களை வரவழைத்த போலீசார் அவர்கள் மூலம், அவரது மனைவியை சேர்த்து வைப்பதாக கீழே இருந்து பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்க வைத்தனர். அவரை பார்க்க செல்போன் கோபுரம் அருகில் பொதுமக்கள் கூடியதால் 2 மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.